மயிலாடுதுறை இலுப்பப்பட்டு வையாபுரி திடல் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன் பாரதி லாரன்ஸ் (32). இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையிலிருந்து நன்னிலத்திற்கு லாரி ஒன்றில் ஜல்லி ஏற்றிக் கொண்டு வந்தார். லாரியில் கிளீனராக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ராகேஷ் (20) உடன் வந்தார்.
தஞ்சை – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படைதளம் அருகில் லாரி வந்து கொண்டு இருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று லாரியை வழிமறித்துள்ளது. காரில் இருந்து இறங்கி வந்த ஒருவர் டிரைவர் பாரதி லாரன்ஸ்சிடம் லாரி எங்கிருந்து வருகிறது. பர்மிட் எங்கே என்று கேட்டுவிட்டு காரில் ஆர்.டி.ஓ. இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
நீங்கள் யார் என்று லாரி டிரைவர் பாரதி லாரன்ஸ் கேட்டுள்ளார். அதற்கு ஆர்.டி.ஓ.வின் டிரைவர் என்று பதில் கூறிய அந்த நபர், லாரி டிரைவர் பாரதி லாரன்ஸ் சட்டைப்பையில் வைத்திருந்த லைசென்ஸ் மற்றும் பணம் ரூ.16,500ஐ எடுத்துக் கொண்டு வேகமாக காருக்கு சென்று விட்டார். உடன் அந்த காரை நோக்கி பாரதி லாரன்ஸ் மற்றும் ராகேஷ். இருவரும் சென்று எப்படி நீங்கள் பணத்தை எடுக்கலாம் என்று கேட்டுக் கொண்டே இருக்கும் போது அந்த 2 பேரும் காரை நகர்த்தி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் செய்வதறியாமல் பாரதி லாரன்ஸ் அங்கேயே நின்றுவிட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து லாரி டிரைவர் பாரதி லாரன்ஸ் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து போலீசார் அந்த வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற் கொண்டனர்.
இதில் லாரி டிரைவரிடம் இருந்து பணத்தை பறித்தது. தஞ்சாவூர் ஆர்.டி.ஓ.,வின் கார் டிரைவர் விவேகானந்தன் மற்றும் ஏஜெண்ட் மாதவன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரையும் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் இருவரும் லாரி டிரைவரிடம் பணம் பறித்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தன், மாதவன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.