தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கை அமலில் உள்ளது. ஆனால் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கின்றது. இந்தி கற்பிக்கப்படாவிட்டால் நிதி தர முடியாது என பாஜக அமைச்சர் கூறி விட்டார்.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் இந்தியை கற்பிக்க வேண்டும் என பாஜகவினர் இன்று கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள்.
அதன்படி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அவர் இந்தி மொழிக்கு ஆதரவாக மக்களிடம் கையெழுத்து பெற்று வந்தார். ஆனால் கையெழுத்து இயக்கத்திற்கு போலீசாரின் அனுமதி பெறவில்லை என்றும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாகவும் கூறி தமிழிசையை போலீசார் தடுத்தனர்.
ஆனால் அனுமதி பெற்று தான் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. தீவிரவாதி மாதிரி என்னை ஏன் போலீசார் சுற்றி உள்ளனர், எனக்கு புரியவில்லை என தமிழிசை வாக்குவாதம் செய்தார். இதனையடுத்து தமிழிசையை போலீசார் கைது செய்தனர். அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த வாகனத்தில் ஏறும்படி கூறினர். ஆனால் தமிழிசை வாகனத்தில் ஏற மறுத்து போலீசாரோடு சண்டை போட்டார். அதைத்தொடர்ந்து பாஜகவினா் மறியல் செய்து சாலையில் அமர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 1 மணி நேரமாக தமிழிசை போலீசாரின் ரவுண்ட் அப்பில் இருக்கிறார். தொடர்ந்து அவர் ஒவ்வொருவருக்காக போன் செய்து வருகிறார். அதே நேரத்தில் பாஜகவினரும் அங்கு திரண்டு போலீசுடன் வாக்குவாதம் செய்து வருகிறார்கள்.