Skip to content

தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி: கரூர் முன்னாள் டிஆர்ஓ கைது

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 2016 முதல் 2019 வரை மாவட்ட வருவாய் அலுவலராக சூரியபிரகாஷ் இருந்து வந்தார். அப்போது கரூரைச் சேர்ந்த டெக்ஸ்டைல் தொழிலதிபர் நல்லமுத்து என்பவரிடம் வெளி மாநிலங்களில் ஆர்டர் வாங்கி தருவதாகவும், பொருள் வாங்குவதாகவும், மற்றும் அசாம் மாநிலத்தில் சூரிய மின்சாரம் முதலீடு செய்வதாககவும் கூறி 16 கோடி பணத்தை வாங்கி மோசடி செய்தாராம்.

அப்போது கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார், முத்துக்குமார் உள்ளிட்டோர் சேர்ந்து நல்லமுத்து விடம்  ரூ.16 கோடி வாங்கி உள்ளனர்.   இது தவிர அசாம் மாநிலத்தை  சேர்ந்த  மேலும் மூன்று பேரும் இதில்  உடந்தையாக இருந்துள்ளனர்.

மொத்தம்  எட்டு பேர் சேர்ந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு எந்த ஒரு ஆர்டரும்  வாங்கி தராமலும், முதலீடு செய்யாமலும் பணத்தை ஏமாற்றி உள்ளனர்.  தொடர்ந்து பல்வேறு முறை இவர்களிடம் நல்லமுத்து பணத்தை கேட்டும்  திருப்பி தராத நிலையில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் தொழிலதிபர் நல்லமுத்து புகார் கொடுத்துள்ளார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தனிப்படையினர் அமைத்து மோசடி செய்தவர்களை தேடி வந்தனர்.  இந்நிலையில் கடந்த மாதங்களில் திருப்பூரை சேர்ந்த முத்துக்குமார், ராஜ்குமார் கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த கார்த்திகேயன் என்பவரை கைது செய்து சிறையில்  அடைத்தனர்.

கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த சூரிய பிரகாஷை கைது செய்ய மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்னை சென்றனர். தற்போது, சென்னையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு மேம்பாட்டு கழகத்தில்  உயர் அதிகாரியாாக  பணிபுரியும் சூரியபிரகாஷை கைது செய்து கரூர் அழைத்து வந்து மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து சுமார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் 1ல்  ஆஜர் படுத்தினர்.  அவரை  வரும்  11ம் தேதி  வரை நீதிமன்ற காவலில் வைக்க  நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகு டிஆர்ஓ சூர்யபிகாஷை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!