Skip to content

தமிழகத்தின் உரிமை காக்க முதல்வர் நடவடிக்கை: ஜெயக்குமாருக்கு, அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை போரூர் அருகே முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புகழரங்க கூட்டம் நடைபெற்றது. 151 வது வார்டு கவுன்சிலர் சங்கர் கணேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் மதுரவாயல் எம் எல் ஏ காரம்பாக்கம் கணபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: “மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கான எம்பிக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது தொடர்பாக எதற்காக முதல்வர் அனைத்து மாநிலங்களையும் முந்திக்கொண்டு முதலில் அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறார் என அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் கேள்வி எழுப்புகிறார். அவருக்கு அறிவு இருக்கிறதா?

தமிழகத்திற்கான எம்பிகளின் எண்ணிக்கையை குறைக்க மாட்டோம் என மத்திய அமைச்சர் அமைச்சராக கூறுகிறார். தமிழகத்திற்கு எண்ணிக்கை குறைக்காவிட்டால் வட மாநிலத்தில் எண்ணிக்கையை உயர்த்தப் போகிறார்கள் என்று அர்த்தம்.

இது தமிழகத்தின் உரிமையை பறிப்பது ஆகும். அதை தடுத்து தமிழகத்தின் உரிமையை காக்க  முதலில் கூட்டம் நடத்துகிறார் முதல்வர்.  மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள். அண்ணா பாணியில் சொல்ல வேண்டுமென்றால் ஆங்கிலம் எனும்  பெரியபூனை இருக்கும்போது இந்தி எனும் பூனைக்குட்டி எதற்கு? குடும்ப கட்டுப்பாடு எனும் திட்டத்தை தென் மாநிலங்கள் சரியாக கடைபிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால் தற்போது மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது சரியாக இருக்காது. எனவே தற்போது உள்ள எண்ணிக்கையில் விகிதாச்சார அடிப்படையில் புதிய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்”

இவ்வாறு அவர் பேசினார்.

error: Content is protected !!