Skip to content

30 ஆண்டுகள் இதே தொகுதிகள் நீடிக்க வேண்டும்- அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

இந்தியாவில்  அடுத்த ஆண்டு மக்களவை தொகுதிகள் சீரமைக்கப்படுகிறது. அப்போது  வட மாநிலங்களில் அதிக தொகுதிகள் உயர வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்பட  தென்னிந்திய மாநிலங்களில்  தொகுதிகள் அதிகப்படுத்தப்படாமல், குறைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அப்படி இல்லாமல்,  எல்லா மாநிலங்களுக்கும் ஒரே அளவாக விகிதாசாரப்படி  தொகுதிகளை உயர்த்த வேண்டும் என  தமிழக முதல்வர்  ஸ்டாலின் மத்திய அரசுக்கு  வலியுறுத்தினார். இந்த கோரிக்கைக்கு தமிழகத்தில் 100 சதவீத  ஆதரவு உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் ஒட்டுமொத்த  கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க  தமிழக அரசு திட்டமிட்டது.  இதற்காக இன்று அனைத்து கட்சி கூட்டம் சென்னை தலைமை செலகத்தில்  கூட்டப்பட்டது.  சாியாக 10 மணிக்கு  முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  கூட்டம் தொடங்கியது.

இதில் திமுக, அதிமுக,  காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள்,  தேமுதிக, விசிக,  தவெக,பாமக , இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளிட்ட 56 கட்சிகளின் பிரதிநிதிகள்  பங்கேற்று உள்ளனர். கூட்டத்தில் தலைமை செயலாளர் முருகானந்தமும்,  துணை முதல்வர்  உதயநிதி மற்றும் அமைச்சர்கள்  பலரும் பங்கேற்று உள்ளனர்.   திக தலைவர் வீரமணி,  பழ நெடுமாறன், மநீம தலைவர்  கமல்ஹாசனும் கூட்டத்தில் பங்கேற்றார்.

‘கூட்டம் தொடங்கியதும் முதல்வர் ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கம் குறித்து  பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு விவகாரத்தில் முடிவெடுப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். சுட்சி வேறுபாடுகளை கடந்து, அழைத்திருப்பது யார் என்று பார்க்காமல் எவ்வளவு முக்கியமான பிரச்சினைக்காக அழைத்திருக்கிறோம் என்று மனதில் வைத்துக் கொண்டு இங்கு வந்திருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாடு அரசின் சார்பில், உங்கள் எல்லோரையும் வருக.. வருக.. என்று நான் வரவேற்கிறேன்.

* தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்த்துவதற்காகத் தான், இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

* தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது.

* இன்றைக்கு தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கிறது. இதை குறைக்கின்ற அபாயம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசு 2026-ம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப் போகிறது. பொதுவாக, இதை மக்கள்தொகையை கணக்கிட்டுத்தான் செய்வார்கள்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு! அந்த இலக்கில் நம்முடைய தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கிறது.  பத்தாண்டுகளாக வெற்றிகரமான குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகளால்  நாம் இதை சாதித்திருக்கிறோம்.

* தற்போது இருக்கின்ற 543 நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்தால், மக்கள் தொகை குறைவாக இருப்பதால், நம்முடைய தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்பிக்கள் கிடைக்க மாட்டார்கள்; 31 எம்.பி.க்கள் தான் இருப்பார்கள்.

* நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 848-ஆக உயர்த்தப்பட்டு, தற்போதைய விகிதாச்சாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், நமக்குக் கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால், பத்து தொகுதிகள்தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் நாம் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும்.

* இந்த இரண்டு முறைகளிலும், நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்! இதனால், தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்.

இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலையில்லை; நம்முடைய தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த கவலை! நம்முடைய தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான
பிரச்சினையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை, உங்கள் அனைவரின் முன்பும் நான் வைக்கிறேன். அனைத்துக் கட்சிகளும், கட்சி எல்லைகளைக் கடந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால், அது தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையை குறைந்துவிடும்.

எனவே, இந்தச் சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில், மக்களவை மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளின் இடங்கள் குறையும் என்று சொல்வது, “மக்கள்தொகை கட்டுப்பாடு” எனும் கொள்கையை, முனைப்பாக செயல்படுத்தி நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென்மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனையாகதான் அமையும். இதை முன்கூட்டியே உணர்ந்துதான், சுடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் நாள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

தமிழ்நாட்டின் உரிமை கூட்டாட்சிக் கருத்தியலோடு கோட்பாடு, தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதுவும் பாதிக்கப்படக்கூடாது என்பதை தீர்க்கமாக திடமாக அப்போதே நாம் வலியுறுத்தியிருக்கிறோம்.

இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல்! இதில் நமக்குள் கருத்து மாறுபாடு நிச்சயமாக இருக்காது என்று நினைக்கிறேன்; இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன்.

இது இந்திய  ஜனநாயகத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் அரசியல்  பிரதிநிதித்துவ உரிமை மீதான நேரடி தாக்குதல்

இப்படிெ யாரு நமநீதியற்ற அநீதியான தொகுதி மறு சீரமைப்பு செயல்படுத்தப்பட்டால் இந்திய அரசியலில் தமிழ் நாட்டின் குரல்  நெரிக்கப்படும்.  தமிழ்நாட்டின் நலனம் மற்றும் தமிழ் நாட்டு  மக்களின் நலன் ஆகியவற்றை  பாதுகாப்பதில் நம் மாநிலத்திற்கு இருக்கும் பலம் குறைக்கப்படும்.

எனவே  உறுதியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று  சொல்லி நான் அந்த தீர்மானங்களை முன்மொழிகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிறக்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ  உரிமைக்கும்  மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய  மக்கள் தொகை  அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது.

* நாட்டின் நலனுக்காக மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் அவர்கள் உறுதி அளித்தவாறே தற்போதும் இந்த வரையறை 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்கள் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின்  எண்ணிக்கை உயர்த்தப்படும்  பட்சத்தில்  1971ம் ஆண்டு  மக்கள் தொகை  அடிப்படையில் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே  எந்த விகிதத்தில்  தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில்  தமிழ்நாடு    உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின்  எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான  அரசியல் சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய  அரசை அனைத்து கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.
தொகுதி சீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை.  அதே நேரம் கடந்த  50 ஆண்டுகளாக சமு்க, பொருளாதார நலத்திட்டங்களை சிறப்புற  செயல்படுத்தியதற்கான  தண்டனையாக  தொகுதி மறு சீரமைப்பு அமைந்து விடக்கூடாது  எனவும் அனைத்து கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.

இந்த தீர்மானங்களின் மீதான உங்களின் கருத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களும் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து  அனைத்து கட்சித்தலைவர்களும்  தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் , அனைத்து கட்சி தலைவர்களும் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று   அனைவரையும் வரவேற்றார்.  கூட்ட அரங்கின் வாயிலில் நின்று  அமைச்சர் நேரு உள்ளிட்டவர்கள் அனைத்து கட்சி தலைவர்களையும் வரவேற்றனர்.

தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் – என அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்தில்  கட்சித்தலைவர்கள் தெரிவித்த  கருத்துக்கள்  வருமாறு:

பாமக தலைவர் அன்புமணி: முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று இந்த பிரச்னை தொடர்பாக அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
திருமாவளவன்:  தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு”வை விசிக வரவேற்கிறது .
சிபிஐ செயலாளர் முத்தரசன்:  ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக, புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி  ஆகிய பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை  கலந்து கொள்ளவில்லை.

error: Content is protected !!