பிரபல சினிமா பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்பனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரபல பின்னணி பாடகி கல்பனா. இவர் ஐதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக கல்பனாவின் வீட்டுக் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்ட காவலாளி, இது குறித்து குடியிருப்பில் வசிப்பவர்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்.
கல்பனாவின் தொலைபேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குடியிருப்புவாசிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார் கல்பனாவின் வீட்டுக் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது அங்கு கல்பனா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
பாடகி கல்பனா மறைந்த நடிகரும் பாடகருமான டி.எஸ்.ராகவேந்திராவின் மகள் ஆவார். தமிழில் தாஜ்மகால் படத்தில் இடம்பெற்ற ‘திருப்பாச்சி அருவாளை’, பிரியமான தோழி படத்தில் இடம்பெற்ற ‘பெண்ணே நீயும் பெண்ணா’, மழை படத்தில் இடம்பெற்ற ‘நீ வரும்போது’ உள்ளிட்ட பிரபலமான பாடல்களை பாடியுள்ளார். தெலுங்கில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் கல்பனா பங்கேற்றுள்ளார்.
கல்பனாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். விவாக ரத்தான நிலையில் கல்பனா தனியாக வசித்து வந்தார்.