2024 மக்களவை தேர்தலில், அதிமுகவும், தேமுதிகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் பேட்டி அளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, வரும் ஜூலை மாதம் காலியாகும் ராஜ்யசபா சீட்டில் அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும். இது தொடர்பாக ஒப்பந்தம் போடவில்லை என்றாலும் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டுள்ளது .அதற்கான வேட்பாளர் யார் என்று அப்போது அறிவிக்கப்படும் என்றார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா என கேட்டபோது, நாங்கள் சீட் தருவோம் என கூறினோமா ?, அந்த கட்சியுடன் நாங்கள் இது தொடர்பாக எந்த உடன்பாடும் போடவில்லை என்றார்.
இதன் மூலம் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் இல்லை என்பது உறுதியாகி விட்டது. ஒரு சீட் கொடுத்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் பாமகவும், தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் என பேசி வருவதாக கூறப்படுகிறது.
அதிமுகவால் 2 இடங்களில் மட்டுமே வெல்லமுடியும். அதுவும் பாமக எம்.எல்.ஏக்கள் ஆதரவும் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளதால், ஒரு இடம் மீண்டும் பாமகவுக்கே கொடுக்கப்படும் என தெரிகிறது.