Skip to content

கோவையில் உயர்ரக போதை பொருள் பறிமுதல்… 6 பேர் கொண்ட கும்பல் கைது…

  • by Authour

கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 50 – க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.  இக்கல்லூரிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா என்னும் போதைப் பொருள் பழக்கம் இருப்பதை கண்டு, கோவை மாநகர காவல் துறையினர் உரிய வழக்குகள் பதிவு செய்து கஞ்சா எங்கு கிருந்து வருகின்றது. என விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக கல்லூரி மாணவர்கள் இடையே சிந்தடிக் டிரக் எனப்படும் மெத்தபெட்டமைன், LSD போன்ற போதைப் பொருள்கள் புழக்கத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில், கோவை மாநகர காவல் ஆணையர் சரவணன் சுந்தர் IPS உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் தேவநாதன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கோவைக்கு போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதும், இங்கு உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் இளைஞர்கள் அதை பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கோவை செட்டிபாளையத்தில் வசிக்கும் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த மிதுன்ராஜ் (27)

என்பவர், கோவை மாநகர் சி 2 பந்தயசாலை காவல் நிலைய எல்லை பந்தைய சாலை பகுதியில் மெத்தபெட்டமைன் என்னும் போதை பொருளை இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 ஆயிரம் மதிப்பு உள்ள சுமார் 7 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் சிறையில் அடைத்தனர்.

மேலும் காவல் துறையினர், மிதுன்ராஜிடம் நடத்திய விசாரணையில், அவர் பல ஆண்டுகளாக மெத்தபெட்டமைனை பயன்படுத்தி வருவதாகவும், பெங்களூரில் வாங்கி வந்து இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இவ்வழக்கில் கூட்டாளிகளாக இருந்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ஜெகநாதன் மற்றும் காளப்பட்டியைச் சேர்ந்த கோகுல் ஆகியோரும் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களையும் கைது செய்து 45 ஆயிரம் மதிப்பு உள்ள சுமார் 6 கிராம் மெத்தபெட்டமைன், ஒரு கார் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய காளப்பட்டியைச் சேர்ந்த கோகுல் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 30 ஆயிரம் மதிப்பு உள்ள சுமார் 4 கிராம் மெத்தபெட்டமைன், இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் கேரளாவில் இருந்து கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் இடம் இருந்து ரூ. 6 லட்சம் மதிப்பு உள்ள போதைப் பொருட்களையும், சொகுசு கார்கள், செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த அஸ்வின் @ மாத்தான் (25), ரியாஸ் (32), திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அமல் (24), பாலக்காட்டைச் சேர்ந்த அப்துல் சலீம் (46), ஆலப்புழையைச் சேர்ந்த அன்சாத் (23) மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த அசாருதீன் (28) ஆவர்.

இவர்கள் பெங்களூரில் தங்கி, டெல்லி மற்றும் பெங்களூரைச் சேர்ந்த நபர்களுடன் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு ஜி பே, போன் பே மற்றும் பேடிஎம் மூலம் பணம் செலுத்தி மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருட்களை மொத்தமாக வாங்கி, அதனை பிரித்து பெங்களூர் மற்றும் கோவை மாநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்பொழுது கைது செய்யப்பட்டவர்கள் இடம் இருந்து 53 கிராம் மெத்தபெட்டமைன், 20 எல்எஸ்டி ஸ்டாம்ப், ஒரு கார் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே இவ்வழக்கில் 16 கிராம் மெத்தபெட்டமைன், ஒரு கார், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தமாக 69 கிராம் மெத்தபெட்டமைன், 20 எல்.எஸ்.டி ஸ்டாம்ப், இரண்டு கார்கள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும், மேற்படி நபர்கள் இடம் இருந்து போதைப் பொருட்களை வாங்கும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நபர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!