Skip to content

பறவைகள் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்.. திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட தலைவர் தங்கதுரை, மாவட்ட துணை தலைவர் செல்வராஜ் ஆகியோர் கொடுத்து மனுவில் கூறியிருந்ததாவது :திருச்சி அய்யாளம்மன் படித்துறை அருகில் பறவைகள் பூங்கா செயல்பட்டு வருகிறது. இப்பூங்காவிற்கு நடுத்தர மற்றும் வசதி படைத்த மக்களிடையே மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த பூங்காவிற்கு நுழைவு கட்டணம் பெரியோர்களுக்கு ஒரு 200, சிறியவர்களுக்கு ரூ150 வசூல் செய்கிறார்கள். ஏழை எளிய மக்கள் தங்கள் குடும்பத்துடன் பறவைகள் பூங்காவிற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அனைத்து மக்களும் கண்டு ரசிக்கும் வகையில் அரசு நுழைவு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஏழை எளிய மக்கள் குடும்பத்துடன் பறவைகள் பூங்காவை கண்டு களிக்கும் வகையில் பெரியோர்களுக்கு ரூ 50 ம் சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என்ற வகையில் கட்டணத்தை மாற்றி நடைமுறைப்படுத்த அரசை வலியுறுத்துமாறு ஏழை, எளிய மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இதேபோன்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க அந்தநல்லூர் ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் நடராஜன், கட்சி கிளை செயலாளர் பரிமணம் அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் கூறியதாவது: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலம் ஊராட்சி சப்பானி கோவில் தெருவில் பட்டியலின மக்கள் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் எவ்வித அடிப்படை வசதியின்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் குடிநீர் குழாய் உள்ளது. ஆனால் வருடத்திற்கு ஆறு மாதம் கூட குடிநீர் வருவது கிடையாது இதனால் இப்போது மக்கள் பல மாதங்கள் குடிநீருக்காக அடுத்த பகுதியில் சென்று குடிநீர் பிடிக்கும் நிலை உள்ளது. மேலும் சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் சேரும் சகதியாக சாலைஉள்ளது. எனவே சாலை வசதி செய்து தர வேண்டுகிறோம் .
இவர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள வடிகால் வாய்காலில் படித்துறை கிடையாது. வாய்க்காலில் தண்ணீர் அதிகம் வந்தால் இப்பகுதி மக்கள் குளிக்க மிகவும் சிரமம் அடைகின்றனர் ஆதலால் இப்பகுதி மக்கள் மட்டும் இன்றி மற்றவர்கள் பயன்படும் வகையில் மேற்படி வாய்க்கால் கரையில் படித்துறை அமைத்து தர வேண்டும்.
மேலும் மயான எரிமேடை, காத்திருப்பர் கூடம் அமைத்துத்தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை அமைக்கவில்லை. மழைக்காலங்களில் யாராவது இறந்து விட்டால் கொட்டும் மழையில் உடலை எரியூட்டும் நிலை உள்ளது. எனவே பட்டியல் இன மக்களுக்கு மயான எரிமேடை காத்திருப்போர் கூடம் மயான சாலை செய்திட வேண்டுகிறோம் என அந்த மனுவில் கூடியிருந்தனர்.

error: Content is protected !!