உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்த போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்கா 350 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை உக்ரைனுக்குக் கொடுத்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது, இருதரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட இருந்த கனிம வளம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அதோடு, பேச்சுவார்த்தை பாதியில் முடிவுக்கு வந்து ஜெலன்ஸ்கியும் அவரது குழுவினரும் அங்கிருந்து வெளியேறினர்.
இந்த மாநாட்டை அடுத்து ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “தற்போது கிடைத்துள்ள பலன் என்னவென்றால், ஐரோப்பாவிடமிருந்து தெளிவான ஆதரவை நாங்கள் பெற்றுள்ளோம். இன்னும் அதிக ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கான இன்னும் அதிக விருப்பத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம்.
அமைதி உண்மையானதாக இருக்க, உக்ரைனுக்கு உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை எனும் முக்கிய பிரச்சினையில் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். இங்கிலாந்து உள்பட ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்தின் நிலைப்பாடு இதுதான்.
அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அமெரிக்காவிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.நன்றியை உணராத நாள் இல்லை. இது நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு.
எங்களுக்குத் தேவை அமைதி, முடிவில்லாத போர் அல்ல. அதனால்தான் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இதற்கு முக்கியம் என்று நாங்கள் கூறுகிறோம்.” என தெரிவித்துள்ளார்.