Skip to content

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம் செய்ய வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

  • by Authour

நாகையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.200 கோடி  நலத்திட்ட உதவிகள்  வழங்கி பேசினார். அப்போது அவர்  பேசியதாவது:

கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை ராணுவம் மோதி படகுகளை மூழ்கடிக்கிறது.  மீன்களை திருடிக் கொள்கிறார்கள்.  படகுகளை பறிமுதல் செய்கிறார்கள்.  விடுதலை செய்யும்போது  பெருந் தொகை  அபராதமாக  விதிக்கப்படுகிறது.

தமிழக மீனவர்களிடம்  பறிமுதல் செய்த  படகுகளை ஏலம் விடுகிறார்கள்.  பிரதமர் மோடி  பதவி ஏற்றபின் 2014 முதல்  2014 வரை  3656 தமிழக மீனவர்களை  இலங்கை கைது செய்துள்ளது.  இவர்களில் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 116 பேர்.   611 படகுகள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  736 பேரை  தாக்கி உள்ளனர். இந்த விவரங்கள் எல்லாம்  ஒன்றிய  இணைய அமைச்சர் கூறிய தகவல்கள்.

இது தொடர்பாக  வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி னேன். ஆனால்  ஒன்றிய அரசு கண்டுகொள்வதில்லை.  இலங்கையுடன் இப்போது பேச்சுவார்த்தை  நடத்துவதில்லை. இலங்கை படை அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளது.  இது தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னை என பாா்க்காதீர்கள்,  இந்திய மீனவர்கள் பிரச்னை.  அவர்களை இந்திய மீனவர்களாக பார்க்க வேண்டும்.  இந்த  பிரச்னைக்கு முற்றுப்புள்ளி  வைக்க வேண்டும்.

கச்சத்தீவு அருகே   தமிழக மீனவர்கள்  மீன்பிடிக்க  புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த  பிரதமர் மோடி  நடவடிக்கை எடுக்க வேண்டும்.   தமிழக முதல்வராக இதை கேட்கிறேன். தமிழகத்தின்  திட்டங்களுக்கு நிதி வருவதில்லை.  இப்போது கல்வி  திட்டத்திலும் நிதி  தருவதில்லை.  மும்மொழி திட்டத்தை அமல்படுத்தினால் தான்  நிதி தருவோம் என்கிறார்கள்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி சிலருக்கு  கண்களை உறுத்துகிறது.  இந்தி படிக்க வேண்டும் என்கிறார்கள்.  சிலரின் சமூக ஆதிக்கத்தை  நிலை நாட்ட  இந்தியை திணிக்கிறார்கள்.  மத்திய அரசு நிதி தராவிட்டால் என்ன நாங்கள் தருகிறோம்  என்று குழந்தைகள் கூட  நிதி கொடுக்கிறார்கள்.  அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு உள்ள மனம் கூட,  ஒன்றிய அரசிடம் இல்லை.

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக வரும் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை  கூட்டி உள்ளோம்.  இது தமிழ்நாட்டு பிரச்னை,   சில கட்சிகள் இந்த கூட்டத்திற்கு  வரவில்லை என கூறி உள்ளனர். உங்க முடிவை  மனசாட்சியோடு மறுபரிசீலனை செய்க. வளர்ச்சியான தமிழ் நாட்டை உருவாக்குவோம், இதற்கு  யார் தடை போட்டாலும் அதை வென்று  , தமிழ்நாடு போராடும்.தமிழ்நாடு வெல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

error: Content is protected !!