Skip to content

காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி… விழுப்புரத்தில் அதிர்ச்சி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த கிரிமேடு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ஏழுமலை-பாக்கியலட்சுமி. இவர்களின் இரண்டாவது மகன் ஜெயசூர்யா(24). இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் நிலையில், வீட்டிலேயே பிரவுசிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். ஜெயசூர்யாவும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரம்யா என்ற கல்லூரி மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் உறவு முறையில் இருவரும் அண்ணன், தங்கை என்ற நிலையில் இதனை ஜெயசூர்யா குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் ஜெயசூர்யா ரம்யா உடனான காதலை கைவிட நினைத்து பேசுவதை நிறுத்தி, அவரிடம் இருந்து விலகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா காதலை கைவிட மனமில்லாமல் கைகளை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டும் புகைப்படங்களை ஜெயசூர்யாவுக்கு அனுப்பி காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வது என மிரட்டியுள்ளார். இருப்பினும் ஜெயசூர்யா தொடர்ந்து பிடிவாதமாக இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி மாலை ஜெயசூர்யாவின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஜெயசூர்யா மட்டும் தனியாக வீட்டில் உள்ள அறையில் இருந்துள்ளார். அப்போது தேநீர் போட்டு தருகிறேன் எனக் கூறிய ரம்யா தேநீரில் எலி பேஸ்ட்டை கலந்து ஜெயசூர்யாவுக்கு கொடுத்துள்ளார். இதனை அறியாத ஜெயசூர்யா தேநீரை குடித்துள்ளார்.

பின்னர் இரவு ஒன்பதரை மணியளவில் ரம்யா வாட்ஸ்ப் (whatsapp) மூலமாக ஜெயசூர்யாவிடம் உடலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என கேட்டுள்ளார். இதற்கு ஜெயசூர்யா ஆமாம் என கூறியுள்ளார். அப்போதுதான் நான் தேநீரில் எலி பேஸ்ட்டை கலந்து கொடுத்தேன் என ரம்யா கூறியுள்ளார். இருப்பினும் இதனை ஜெயசூர்யா நம்பாத நிலையில் இரவு 11 மணி அளவில் ஜெயசூர்யாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக நண்பர்கள் இருவர் ஜெயசூர்யாவை மடப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் ஜெயசூர்யாவின் உடல் மிகவும் மோசமடைந்த நிலையில், அவர் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயசூர்யாவின் ஒரு கிட்னி செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜெயசூர்யா ரம்யாவை காட்டிக் கொடுக்காமல் தற்கொலைக்கு முயன்றதாக கூறிவந்த நிலையில், ஜெயசூர்யாவின் தொலைபேசியை சோதனை செய்தபோது அதில் ரம்யா உடனான வாட்ஸப்பில் பேசியதை கண்ட ஜெயசூர்யாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதன் காரணமாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வர இருக்கின்றனர். இந்நிலையில் காதலனை தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொலை செய்ய முயன்ற ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர்.    கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!