சென்னை நந்தனம் அண்ணா சாலையில் உள்ள ஜிஆர் காம்ப்ளக்ஸ்சில் அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இதற்கிடையே இன்று ஐந்தாவது தளத்தில் மாணவர்கள் படித்துக்கொண்டு இருந்தபோது லேசான அதிர்வு உணர்ந்ததால் பயிற்சி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
அண்ணாசாலையில் பாலம் அமைப்பதற்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் லேசான அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. பயிற்சி மைய நிறுவனத்தின் தரப்பில் நிலம் அதிரும் உணர்வு தென்பட்டவுடன் நிலநடுக்கம் என எண்ணி, மாணவர்கள் நலன் கருத்தில் கொண்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இன்றும், நாளையும் மாணவர்களுக்கு வகுப்புகள் செயல்படாது எனவும், ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவுறுத்தி உள்ளோம், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அருகாமையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் பணி காரணமாக அதிர்வு நிகழ்ந்திருக்கலாம் என்பதாக தற்போது தெரிவிக்கிறார்கள், உண்மையில் நில அதிர்வா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பதை தெரியவில்லை என தெரிவித்தார்
உடனடியாக சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து நில அதிர்வு ஏற்பட்டதா அல்லது வதந்தியா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரிக்டரில் பதிவாகாத அளவுக்கு சென்னையில் நில அதிர்வு வருவது வழக்கம்தான் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறியுள்ளது.