தமிழக கவர்னர் ரவி, தமிழ்நாட்டில் இளைஞர்கள் விரும்பி மொழிகளை படிக்க முடியவில்லை என்பது உள்பட பல குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மீது கூறி இருந்தார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக பதிலளித்துள்ளார். அதில் அமைச்சர் ரகுபதி கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பொருளாதாரத்திலும் கல்வியிலும் பெற்றிருக்கும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தமிழ்நாட்டின் மீது வெறுப்பை உமிழ்வதையே தனது கடமையெனக் கருதி செயலாற்றி வருகிறார் ஆளுநர் ரவி. தனது அரசியலமைப்பு கடமைகளை மறந்து ஆதாரமற்ற அவதூறுகளை வைத்து தமிழ்நாட்டை இழிவுப்படுத்தும் அரசியலை செய்வதற்காகவே ஒன்றிய பாஜக அரசு ஆர்.என்.ரவியை ஆளுநராக வைத்திருக்கிறது.
தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி இருமொழிக் கொள்கையினால் சாதித்தவை, தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணிக்கலாம் அதற்கு புதிய கல்விக் கொள்கையை ஒரு வழியாக வைத்து உள்நுழையலாம் எனும் ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவர்களா தமிழர்கள்? தமிழ்-தமிழ்நாடு-தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றின் மீது தொடர்ந்து வெறுப்பை உமிழும் ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி பாடம் எடுக்க வேண்டாம்.
சனாதனத்தையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் காலூன்றச் செய்திட குட்டிக்கரணம் போடும் ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழ் மண்ணில் வேறூன்றவில்லை. அப்படித்தான் மும்மொழி கொள்கையும் மூக்கறுபட்டு நிற்க போகிறது. மொழித் தேர்வு எது? மொழித் திணிப்பு எது? என்பது எங்களுக்கு தெரியும், இந்த நாடகங்கள் எல்லாம் இங்கே எடுபடாது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.