Skip to content

பணியில் இருந்த மயிலாடுதுறை நர்ஸ் திடீர் சாவு- உறவினர்கள் முற்றுகை

மயிலாடுதுறை அடுத்த  மணல்மேடு காவல் சரகத்துக்கு உட்பட்ட மேலஆத்தூர் கிராமத்தை சேர்ந்தபொன்னையன் மகள் தையல்நாயகி(30). இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நீடுரை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது.   திருமணம் ஆன சில நாட்களிலேயே கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.

மணல்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு வருடங்களாக செவிலியராக பணியாற்றி வந்த இவர் நேற்று இரவு பணிக்கு சென்றுள்ளார். இரவு 8.30 மணி அளவில் வீட்டிலிருந்து கொண்டுசென்ற இரவு உணவை சாப்பிட்ட தையல்நாயகி, 9 மணி அளவில் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தையல்நாயகியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த சுகாதார நிலைய அலுவலர்கள் அவரை மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் கொண்டு  சென்றனர்.. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தையல்நாயகி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்த தையல்நாயகி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியின் போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்த செய்தி அறிந்த உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர்.

error: Content is protected !!