Skip to content

ரூ. 300 கோடி கை மாறியதால், பாஜக எதிர்ப்பை கைவிட்டாரா விஜய்?

தவெக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா  மாமல்லபுரம்  அடுத்த பூஞ்சேரி  நட்சத்திர விடுதியில் கடந்த 26ம் தேதி நடந்தது.   அவசர கோலத்தில் அள்ளித்தெளித்தது போல விழா ஆரம்பம் முதல் முடியும் வரை  பலவற்றை  சுட்டிக்காட்டலாம்.

கட்சி தொண்டர்களுக்கே முன்னுரிமை என விஜய் கூறி வந்தாலும் விசிக வில் இருந்து வந்த ஆதவ் அர்ஜுனா , அதிமுகவில் இருந்து வந்த நிர்மல் குமார் போன்றவர்களின் ஆதிக்கமே  விழாவில் மேலோங்கி இருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆதவ் ஏற்பாட்டில் வரவழைக்கப்பட்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்க்கு, கட்சி சார்பான மேடையில் தனி முக்கியத்துவம் கொடுத்தது ஏன் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதே நேரத்தில் அவர் கெட்அவுட்  ஹேஸ்டேக்கில் கையெழுத்து போட முடியாது என  உறுதியுடன் கூறியதையும் பார்க்க தவெக தொண்டர்கள்  மனநிலையையும் பார்க்க முடிந்தது.

விஜய் பேசும்போது “பண்ணையார்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்” என உணர்ச்சி பொங்க பேசினார். “இதுநாள் வரை களத்தில் இறங்கி மக்களை சந்திக்காமல் பனையூரில் இருந்து கொண்டு அரசியல் செய்து வரும் விஜய் பண்ணையார் அரசியலைப் பற்றி பேசலாமா” , அத்துடன் , விஜய் அன்றாடம் காய்ச்சி வீட்டு பிள்ளையா, இவர் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவரா, கோடீஸ்வரர் வீட்டு  மருமகன் ஆதவ் அருகில் இருப்பதை  விஜய் கவனிக்கவில்லையா என்ற கமெண்ட்களையும் சமூக வலைதளங்களில் அதிகமாக பார்க்கமுடிந்தது.

அதோடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளச் சொல்லி அதற்காக தமிழ்நாட்டின் கல்வி நிதியை நிறுத்தி வைத்திருக்கும் பாஜக அரசை கண்டித்து மாநில உரிமைசார்ந்து கடுமையாக பேசுவார் என எதிர்பார்த்த தொண்டர்களுக்கு  மிஞ்சியது ஏமாற்றம் தான்.

பாஜக என்ற வார்த்தையையோ , இந்தி என்ற வார்த்தையையோ கூட உச்சரிக்காமல் புரோ . . புரோ . . என பேசி மிக முக்கியமான தமிழ்நாட்டு பிரச்சனையில் காமெடி  பீசாக விஜய் தன்னை மாற்றிக்கொள்ள  முயற்சி செய்து , அதில் தோற்றுப்போனதும்  ரசிக்கும்படியாக இல்லை.

இருமொழி கொள்கையே தங்களின் கொள்கை என அறிவித்திருந்த விஜய் தற்போது மும்மொழி கொள்கையை கட்டாயம் ஏற்க வேண்டும் எனக் கூறி பாஜக அரசு நிதியை நிறுத்தி வைத்திருக்கும் போது, அதை அவர்களின் அரசியல் ஆயுதமாக எடுத்து மிகப்பெரிய அளவில் தவெக போராடி இருக்க வேண்டும். ஆனால் வெறும் காமெடி மட்டுமே செய்வது அதை நீர்த்துப்போகச் செய்யும் வேலைதானே என அரசியல் பார்வையாளர்கள் கொந்தளிக்கின்றனர்.

விக்கிரவாண்டி முதல் மாநாட்டில் தங்களின் கொள்கை தலைவர்களையும், மொழிக்கொள்கையையும் அறிவித்து முழங்கிய விஜய் தற்போது அந்த கொள்கைகளுக்கே ஆபத்து நேரும் போது அமைதியாக வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

இதுபற்றி பிரபல பத்திரிக்கையாளர்கள் சிலரிடம் கேட்ட போது, “கடந்த ஆண்டு இருந்த விஜயின் மனநிலையும் தற்போதுள்ள மனநிலையும் ஒன்றல்ல, அன்று அவர் தமிழ் தேசியத்தையும் , திராவிட அரசியலையும் இரு கண்களாக வைத்து செயல்படுவோம் என்றார். இரண்டிற்கும் பல வேற்றுமைகள் இருந்தாலும் மும்மொழி என்ற பெயரில் இந்தி திணிப்பு முயற்சி திராவிடம் ,தமிழ் தேசியம் இரண்டிற்குமே எதிரானது தான். அதை கடுமையாக எதிர்க்க வேண்டிய விஜய் அமைதியாக இருக்கிறார்.

அதுமட்டுமல்ல மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைக்கபட்டு நமது அரசியல் உரிமையே பறிக்கப்படும் . அல்லது  இந்தி பேசும் மாநிலங்களில்  100 தொகுதிகள் வரை அதிகரிக்கப்பட்டு, நமக்கு  எதுவும்  கிடைக்காவிட்டால் என்ன ஆகும்?   என்பது  பற்றி  இதுவரை கருத்து சொல்லவில்லை விஜய்.

இதனை வைத்து பார்க்கும் போது திமுக வை மட்டும் எதிர்ப்பது தான் விஜயின் நோக்கம். பாஜகவை பகைத்துக்கொள்ள விஜய் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பாஜகவை எதிர்க்காமல் அரசியல் செய்வேன் என்பது அரசியல் கோமாளித் தனம். ”

தான் திருடன், பிறனை திருடன் என்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப,  பாஜகவுடன் அண்டர்கிரவுண்ட் டீலிங் செய்யும் விஜய்,  திமுகவும், பாஜகவும்  சண்டைபோடுவது போல நடிக்கிறார்கள் என  மக்களை திசை திருப்ப பார்க்கிறார்.

“ஆதவ் வருகைக்கு முன், வருகைக்குப் பின் என இரண்டாக தவெக நிலைப்பாட்டைப் பிரிக்கலாம். ஆதவ் வருகைக்கு முன் திமுக , பாஜக எதிர்ப்பு , அதிமுக வோடு நட்பு என்ற வகையில் செயல்பட்ட விஜய் தற்போது பாஜக வை எதிர்க்க வேண்டாம் , திமுக வை மட்டும் எதிர்ப்போம் என்ற நிலைக்கு வந்திருக்கிறார்.

இதற்கு காரணம் ஆதவ் மூலம் கைமாறப்பட்ட 300 கோடி ரூபாய். ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கி இருக்கும் ஆதவ் மாமனார் மார்ட்டின் நிறுவனத்தை வைத்து ஆதவ் மூலம் பாஜக தனது அரசியல் காரியங்களை செய்து கொண்டுள்ளது. அதிமுக விற்கு செல்வதாக இருந்த ஆதவை தவெக பக்கம் போக வைத்ததே பாஜக தான் .

தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் செலவு, அரசியல் செலவு என சுமார் 300 கோடிக்கான செலவுகளுக்கு ஆதவ் பொறுப்பேற்றுள்ளார். ஆகவே இனி விஜயிடம் இருந்து தப்பி தவறி கூட பாஜக எதிர்ப்பு பேச்சு வராது. பாஜக வை எதிர்க்காமல் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் அரசியல் அடையாளம் கிடைக்காது என்பது  விஜய்க்கு தெரிந்தும் தற்போதைய நிலையில்  பாஜக எதிர்ப்பை  தவிர்த்தே வருகிறார்.

தமிழ் தேசியம் , திராவிடம் என்றெல்லாம் பேசிவிட்டு பாஜகவிடம் தவெக அடைக்கலம்  புகுந்து விடுமோ என்ற பயம் தவெக கட்சி தொண்டர்களிடத்திலேயே காணமுடிந்தது.

ரஜினியின் பஞ்ச் டயலாக்காக  விஜய்க்கு ஒன்றை  தமிழ் மக்கள் சொல்ல ஆசைப்படுகிறார்கள்.

“விஜய் புரோ. . . . படத்தில நடிச்சா தமிழ்நாட்டு மக்கள் கைதட்டுவாங்க. . ஆனா அரசியல்ல நடிச்சா கைவிட்டுருவாங்க புரோ”.!

error: Content is protected !!