தமிழகத்தில் பருவம் தவறி கடந்த வாரம் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள்மற்றும் பயறு வகைகள் மழை தண்ணீரில் மூழ்கியது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் சக்கரபாணி, பன்னீர்செல்வம், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். அவர்கள் இன்று முதல்வர் ஸ்டாலினிடம் பாதிப்பு குறித்து அறிக்கை அளித்தனர். அதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் துறை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் இழப்பீடு குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் 33% அளவுக்கு சேதம் அடைந்து இருந்தால் ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்ட இளம் பயறு வகைகளுக்கு இழப்பீடாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். பயிர்சேத கணக்கெடுப்பு ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும். உடனே அறுவடை மேற்கொள்ள 50% மானியத்தில் அறுவடை எந்திரங்கள் வழங்கப்படும்.
மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு 50% மானியத்தில் 8 கிலோ உளுந்து விதை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.