Skip to content

சம்மன் கிழிப்பு, துப்பாக்கியை காட்டி போலீசை தாக்கிய சீமான் செக்கியூரிட்டி கைது

  • by Authour

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்  மீது  ஒரு  நடிகை  பாலியல் புகார் கொடுத்தார். இது தொடர்பாக சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை   நடத்தி வந்தனர்.  இந்த வழக்கை 12 வார காலத்தில் முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என ஐகோர்ட்  உத்தரவிட்டது.

எனவே இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு  27ம் தேதி (இன்று) ஆஜராகும்படி  ஏற்கனவே  சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் இன்று  விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது சார்பில் வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜரானார்கள்.

இதைத்தொடர்ந்து இன்று  மதியம்  வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர்  பாலவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்று  சம்மனை   சுவற்றில் ஒட்டினார். அதில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு வளசரவாக்கம் போலீசில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது.  விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படியும் கூறப்பட்டு இருந்தது.  சம்மனை ஒட்டிவிட்டு  இன்ஸ்பெக்டர்  செல்போனில் வீடியோவும் எடுத்துக்கொண்டார்.

பத்திரிகையாளர்களும் சம்மன் ஒட்டியதை பார்வையிட்டனர்.  இனியும் சீமான் ஆஜராகாவிட்டால் என்ன நடவடிக்கை  எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,  கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இந்த நிலையில் சம்மன் ஒட்டிய இன்ஸ்பெக்டர்  புறப்பட தயாரானதும்,  சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட   சம்மனை வீட்டில் இருந்த  ஒருவர்   கிழித்தார்.  அவர் நாதக நிர்வாகி என கூறப்படுகிறது.   அப்போது சீமான் வீட்டு  செக்கியூரிட்டி,  சம்மன் ஒட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டரிடம்  வாக்குவாதம் செய்தார். அவர் கைத்துப்பாக்கியும் வைத்துக்கொண்டு  போலீசாரை மிரட்டும் தொனியில்  நடந்து கொண்டார்.

இதனால் அவரை  போலீசார் பிடிக்க முயன்றனர்.  துப்பாக்கியை ஒப்படைக்கும்படியும் கூறினர்.  அவர் துப்பாக்கியை தர மறுத்து  வாக்குவாதம் செய்தார். இதனால்   போலீசாருக்கும் செக்கியூரிடடிக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நேரத்தில்  அங்கே வந்த சீமான் மனைவி  கயல்விழி  எதையும் கண்டுகொள்ளாமல்  வீட்டுக்குள் போய்விட்டார்.    போலீசாருடன் தள்ளுமுள்ளில்  ஈடுபட்ட செக்கியூரிட்டியை போலீசார்  பிடித்து   குண்டு கட்டாக ஜீப்பில் ஏற்றி  போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக  சம்மன் ஒட்டச்சென்ற  போலீசாரை , செக்கியூரிட்டிகள் என்ற பெயரில் சீமான் வீட்டில்  இருந்தவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.   நிலைமை மோசமானதை அறிந்த சீமான் மனைவி  வெளியே வந்து,  செக்கியூரிட்டி தாக்கியதற்கு   மன்னித்து கொள்ளுங்கள் என போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார். கைது செய்யப்பட்ட செக்கியூரிட்டி முன்னாள் ராணுவ வீரர் என கூறப்படுகிறது. சம்மனை கிழித்தவரையும் போலீசார்   கைது செய்தனர்.

error: Content is protected !!