மகா சிவராத்திரியை யொட்டி, கோவை சொக்கம்புதூரில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கப்பட்ட மாசாணியம்மன் உருவத்தின் முன்பு மேளதாளம் முழங்க நள்ளிரவு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த மயான பூஜையில் ஈடுபட்ட பூசாரி, கையில் அரிவாள், சூலாயுதம் போன்ற ஆயுதங்களுடன் மாசாணியம்மனின் களிமண் உருவத்தைச் சுற்றி ஆக்ரோசமாக நடனமாடி பூஜை செய்தார். அதைத் தொடர்ந்து,
களிமண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மனின் இதயத்தில் இருந்து கைபிடி மண்ணை எடுத்து, அதில் இருந்த மனித எலும்பை வாயில் கடித்தபடி நடனமாடினார். பின்பு மாசாணியம்மனின் உருவத்தின் இதயப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை சொக்கம்புதூரில் உள்ள மாசாணியம்மன் கோயிலுக்குக் கொண்டு சென்று, அங்கு அந்த மண்ணை வைத்து பூஜை செய்யப்பட்டது. நள்ளிரவில் ஆக்ரோஷ நடனமாடி நடைபெறும் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபட்டால், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை தொடர்ந்து நாளை சக்தி கரகம் அழைத்து வருவதல், அதற்கு மறுநாள் அன்னதான நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற உள்ளன.