திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ரூ.349.98 கோடியில் அமைப்பதற்கான பணியை கடந்த 2021 டிசம்பர் 30ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 2022 ஜூன் 13ம் தேதி நிர்வாக அனுமதி வழங்கியது.
பணிகள் வேகமாக நடந்து வந்த நிலையில், பேருந்து முனைய பணிகள் தற்போது 93சதவீதம் முடிந்துள்ளது. இருப்பினும் இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வரும்போது 2 லட்சம் மக்களை கையாளும் அளவிற்கு மிக தரமானதாகவும், பெரிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கட்டுமான பணிகள் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார். பஞ்சப்பூர் பஸ் நிலைய பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அமைச்சருடன், கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன், போலீஸ் கமிஷனர் காமினி ஆகியோரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:
எந்தெந்த துறைகளில் பணிகள் முடியாமல் இருக்கிறதோ, அவற்றை விரைவில் செயல்படுத்த வேண்டும், ஏற்கனவே பிப்ரவரி மாதம் முடிக்க வேண்டிய பணிகள் ஏப்ரல் மாதத்திலாவது முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன். பஞ்சப்பூர் பஸ் நிலைய பணிகளை மார்ச் 15ம் தேதிக்குள் முடித்து விட வேண்டும் என கூறி இருக்கிறேன். மார்ச் இறுதியில் பஸ் நிலையம் திறப்பதற்கான வேலைகள் நடக்கிறது.
ஆம்னிபேருந்து நிலையம் கட்டப்படும் வரை தற்போது செயல்படும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் புறப்படும்.
டவுன் பஸ் முழுவதும் அங்கு இருந்து இயக்கப்படும்.
மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.