அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கையில் குறைவு என்ற நிலையில் பாஜக இரண்டு வித நிலைப்பாடுகளை எடுத்துள்ளது தற்பொழுது உள்ள 543 எம்பிக்களை அதே அளவில் வைத்து தென் மாநிலங்களில் சதவீதத்தை குறைத்து வடமாநிலங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வெற்றி பெறுவது .
அல்லது , ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அதிக உறுப்பினர்களை உருவாக்கி தென் மாநிலங்களை கணக்கை எடுத்துக் கொள்ளாமல் வட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் எம்.பி. சீட்டுகளை உருவாக்கி மீண்டும் இந்துத்துவா சக்திகள் ஆட்சிக்கு வர முடியும் என்ற கணக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது.
இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து முழுமையானது அல்ல .மேம்போக்கான பதில். எனவே தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியது போல் நமது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக பாவித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது நமது கடமை .
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மொழி என்ற இலக்கை நோக்கி பாஜக இந்த தொகுதி மறு சீரமைப்பை கொண்டு வருகிறது. கர்நாடகாவும் கைவிட்ட நிலையில் தென் மாநிலங்களை தவிர்த்து வடமாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துக்கொள்ளலாம் என்ற பாஜகவின் என்னத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் நம்முடைய குரல் ஓங்கி ஒலிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை மார்ச் ஐந்தாம் தேதி தமிழக முதல்வர் கூட்டியுள்ளார்.
தமிழ்நாடு ,கேரளா ,ஆந்திரா ,கர்நாடகா, தெலுங்கானா மட்டுமல்லாமல் மகாராஷ்டிராவிற்கும் சேர்ந்து இந்த பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது எனவே பாதிக்கப்படும் அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து போராடும் சூழல் விரைவில் ஏற்படும் .
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான நிலை எப்போதெல்லாம் எழுகிறதோ அப்போதெல்லாம் தமிழக முதல்வரின் குரல் ஓங்கி ஒலிக்கும். தமிழ்நாட்டின் எதிர்ப்புக்குரல் முதலாவதாக எழும் ,
அண்மையில் புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கான நிதியை தர முடியாது என்றது மத்திய அரசு. நாட்டிலேயே முதல் ஆளாக தமிழ்நாடு தான் எதிர்த்தது .
543 நாடாளுமன்ற தொகுதிகளில் தமிழ்நாடு 39 இடங்களை கொண்டுள்ளது. தென்னிந்தியா 26% தொகுதிகளை கொண்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு வந்தால் தென்னிந்தியாவின் இடங்கள் குறைந்து போகும்.
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய தமிழ்நாடும், தென்மாநிலங்களும் முன்னேறியிருக்கிறது . அலட்சியமாக இருந்த வட மாநிலங்கள் தற்போது பின்தங்கியுள்ளது.
மருத்துவக் கல்வி நம்முடைய உரிமையாக இருந்தது. நீட் தேர்வு மூலம் அதை மத்திய அரசு எடுத்துக் கொண்டு விட்டது. மற்ற இளங்கலை படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டு வந்து தடுக்க நினைக்கின்றனர்.
தமிழ்நாட்டின் GST வரி வருவாயில், நமக்கு 1 ரூபாய்க்கு வெறும் 27 பைசா தான் தருகின்றனர். பீகாருக்கு 7 ரூபாயும், உத்தரபிரதேசத்திற்கு 2.75 காசு திருப்பி தருகின்றனர்.
வளர்ந்த மாநிலமான நமது பணத்தை எடுத்து வளராத மாநிலங்களுக்கு கொடுப்பது, தவறான செயல். தமிழ்நாட்டின் உரிமைகளை, பொருளாதாரத்தை, கலாச்சாரத்தை சீரழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வரும் நிலையில், இப்போது நமது அதிகாரத்தையும் பறிக்கும் சூழல் வந்துள்ளது .
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் இடங்களை குறைப்பதன் மூலம் நம்முடைய குரலை ஒடுக்க நினைக்கிறது மத்திய அரசு. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். தமிழ்நாட்டின் அதிகாரம் ஒன்றிய அரசில் சற்றும் குறைந்து விடக்கூடாது என்பதால் தான் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டி உள்ளார். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.