அரியலூர் மாவட்டத்தில்
பல்வேறு பகுதிகளில் புதிய பேருந்து வழித்தடங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் சார்பில் நகர மற்றும் புறநகரப் பேருந்து சேவையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (26.02.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மாணாக்கர்கள் உள்ளிட்டோர்களுக்கு அரசு பேருந்து சேவை செயல்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக இன்றையதினம், அரியலூர் மாவட்டத்தில், சொக்கநாதபுரம் நமங்குணம் கிராமத்தில், தமிழ்நாடு கிராமங்களை இணைக்கும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், திருச்சி மண்டலம் சார்பில் தடம் எண்.508L, காலை 7.45 மணிக்கு திட்டக்குடி – அரியலூர், (காடூர், நமங்குணம் வரை சென்று வருதல்), தடம் 510J, மாலை 6.00 மணிக்கு அரியலூர் – திட்டக்குடி, (நமங்குணம், காடூர் வரை சென்று வருதல்) 2 நடைகள் இயக்கும் வகையில் புறநகர் பேருந்து சேவையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து பழமலைநாதபுரம் கிராமத்தில் தடம் எண்.018A, காலை 7.00 மணிக்கு செந்துறை – துங்கபுரம், பழமலைநாதபுரம் வழியாகவும், மாலை 4.25 மணிக்கு செந்துறை – துங்கபுரம், பழமலைநாதபுரம் வழியாகவும், மாலை 5.05 மணிக்கு துங்கபுரம் – செந்துறை, பழமலைநாதபுரம் வழியாகவும் 3 நடைகள் இயக்கும் வகையில் நகரப் பேருந்து சேவையினை துவக்கி வைத்தார்.
பின்னர் மணப்பத்தூர் ஊராட்சியில் வழித்தடம் எண்.013A, அரியலூர் – R.S.மாத்தூர் மணப்பத்தூர், சோழன்குடிக்காடு வழியாக நகரப் பேருந்து சேவையினை துவக்கி வைத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் புதிய பேருந்து வழித்தடங்களில் பேருந்து சேவை தொடர்ந்து துவக்கி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி மணப்பத்தூர் கிராம
பொதுமக்கள் தினசரி ஒரு பேருந்து இயக்கம் மட்டுமே உள்ளது கூடுதல் பேருந்து சேவை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் தான் மணப்பத்தூர் அரசுப்பள்ளி 8-ஆம் வகுப்பிலிருந்து 10-ஆம் வகுப்பு வரை பயிலும் வகையில் அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதேபோன்று 1989 வருடத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் மணப்பத்தூர், சித்துடையார் சாலைகள் அமைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று இன்று மணப்பத்தூரில் பொதுமக்கள் கூடுதல் நகரப் பேருந்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். இதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து, சேடக்குடிகாடு கிராமத்தில் தடம் எண்.002A, காலை 8.10 மணிக்கு செந்துறை – ஜெயங்கொண்டம், சேடக்குடிகாடு வழியாகவும், மாலை 5.05 மணிக்கு ஜெயங்கொண்டம் – செந்துறை, சேடக்குடிகாடு, கீழமாளிகை வழியாகவும் 2 நடைகள் இயக்கும் வகையில் நகரப் பேருந்து சேவையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கிவைத்தார். இப்பேருந்து சேவையினை பொதுமக்கள், பணி நிமித்தமாக வெளியூர் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி, திருச்சி மண்டல பொது மேலாளர் ஆ.முத்துகிருஷ்ணன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, கோட்ட மேலாளர் பெரம்பலூர் புகழேந்திராஜ், அரியலூர் கிளை மேலாளர் குணசேகரன், ஜெயங்கொண்டம் கிளை மேலாளர் ராஜா, செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.