கரூர் மாவட்டம், குளித்தலையில் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், திருச்சி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்ஸின் அடியில் கார் சிக்கிக் கொண்டதால் அப்பளம் போல் கார் நொறுங்கியது.
இதனால் காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் மூன்று ஆண்கள் உட்பட ஐந்து பெரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கார் பஸ்ஸின் அடியில் சிக்கி உடல்களை மீட்க முடியாததால் முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1.30 மணி நேரமாக போராடி காரின் இடிபாடுகள் இடையே சிக்கிய ஐந்து பேரின் உடல்களையும் மீட்டனர்.
ஐந்து பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இறந்தவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவை மாவட்டம், குனியமுத்தூரை சேர்ந்த செல்வராஜ் 52. என்றும் அவர் தனது மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோருடன் ஒரத்தநாடு அருகே கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்தாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இந்த விபத்தில் காரினை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம், வில்லரசன்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.