வேலூர் மாவட்டம் கேவி குப்பத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விருதம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் அருண் கண்மணி என்பவர் இருசக்கர வாகனத்தில் போதையில் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, கேவி குப்பம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது எதிரே சென்ற தனியார்க்கு சொந்தமான ஷூ கம்பெனி மினி வேனை மடக்கி உள்ளார். மினி வேன் ஓட்டுனர் சேட்டு என்பவரிடம் காவலர் அருண் கண்மணி மது போதையில் எதற்கு வாகனத்தை என் மீது ஏற்றுவது போல் வந்தாய்? என அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அருண் கண்மணி டிரைவர் சேட்டுவை கேவி குப்பம் காவல் நிலையம் அழைத்து வந்து இவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி சொல்லியதாக கூறப்படுகிறது.
அப்போது பணியில் இருந்த பெண் காவலர் நந்தினி கேவி குப்பம் காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்த நேரத்தில், அருண் கண்மணி, “நான் சொல்லியும் இன்னும் வழக்கு போடவில்லையா?” என தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது மதுபோதையில் இருந்த காவலர் அருண் கண்மணி, உடனடியாக அவர் அணிந்திருந்த துணிகள் அனைத்தையும் கழட்டி வீசி விட்டு அட்ராசிட்டி செய்துள்ளார். இதனால் பெண் காவலர் நந்தினி அலறி அடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த கே.வி. காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் காவலர்கள் அருண் கண்மணியை பிடித்து துணிகளை அணிவித்து உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். மருத்துவ பரிசோதனைக்காக வந்த காவலர் அருண் கண்மணி அங்குள்ள கண்ணாடி கதவுகளை உடைத்துள்ளார். அதில் காவலர் அருண் கண்மணிக்கு கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிப்பதற்காக வந்த அரசு மருத்துவர் செந்திலிடம், தகாத வார்த்தைகளால் பேசி பணி செய்ய விடாமல் ரகளை செய்துள்ளார்.
இதனால் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மத்தியில் மது போதையில் இருந்த காவலர் செய்த ரகளையால் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டு அரசு மருத்துவரை பணி செய்ய விடாமல், அவதூறு வார்த்தைகளால் பேசியதாக மருத்துவர் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் காவல் நிலையத்தில் பொது சொத்தை சேதப்படுத்தியதாகவும், அரசு மருத்துவரை பணி செய்ய விடாமல் செய்ததாகவும் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கே வி குப்பம் காவல் நிலையத்தில் ஷூ கம்பெனி வேன் ஓட்டுனர் சேட்டு கொடுத்த புகாரின் பேரிலும் காவல் நிலையத்தில் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரிலும் 7 பிரிவுகளில், அவர் மீது வழக்கு பதிவு செய்து குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.