மருத்துவமனையில் பணம் கொள்ளை..
திருச்சி காந்தி மார்க்கெட் மதுரை ரோடு பகுதியில் செல்லப்பிராணிகள் நல மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் சஞ்சீவ் குமார் ( 38). இவர் நேற்று முன்தினம் மருத்துவமனையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்தபோது மருத்துவமனையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்து ரூ. 53,000 பணம் மற்றும் கேமராவுக்கான டி.வி.ஆர். சாதனங்கள் திருடு போயிருந்தது. இது குறித்து டாக்டர் சஞ்சீவ் குமார் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை…
திருச்சி உறையூர் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் செல்வகுமார் (வயது 57) பெயிண்டர். குடி போதைக்கு அடிமையான இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மன அழுத்தத்தில் இருந்து வந்த செல்வகுமார் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பாலாமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தவறி விழுந்து சாவு
திருச்சி வண்ணார் மேல வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஸ்டின் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தவறி விழுந்தார். உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்திலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் சந்தோஷ் ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் போதை மாத்திரைகள், கஞ்சா வி ற்ற 9 பேர் கைது.. 2 பேர் எஸ்கேப்…
திருச்சி மாநகரில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி பாலக்கரை, திருவரங்கம் ரெட்டமலை, ராம்ஜி நகர மில் காலனி பகுதியில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர். இதில் கஞ்சா விற்றதாக முகமது அலியார், ஜெய்சங்கர், விஜயகுமார், சுகுமார் மனைவி கங்காதேவி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர் இவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.முகமது அலியார், ஜெய்சங்கர் ஆகியோரிடம் இருந்து ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் திருவானைக்காவல் பெரியார் பாலம் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நல்லதம்பி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக அருண் முத்து ,பிரசன்னா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது .இதே போல் திருச்சி பாலக்கரை போலீஸ் சரகம் முதலியார்சத்திரம் கெம்ஸ்டவுண் ரேஷன் கடை அருகில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்திய போது போதை மாத்திரைகள் விற்றதாக பிரின்ஸ், ஆரிஃப் கான், சையது முஸ்தபா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் .ஆல் பின், அல்லா பிச்சை ஆகிய 2 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.