Skip to content

மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மதியம்  அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும்  முதல்வர் மு.க. ஸ்டாலின்   பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் வரும் மார்ச் 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. தொகுதி மறு சீரமைப்பு  என்ற பெயரில் தென்னிந்தியாவில் உள்ள   மக்களவை  தொகுதிகளை குறைக்க  மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது.  தற்போது தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் உள்ளன.

மறுசீரமைப்பு  என்ற பெயரில்  அது அமல்படுத்தப்பட்டால் 31 தொகுதிகளாக குறையும்.   மக்கள் தொகை அடிப்படையில் இது நடத்தப்படுகிறது.  தமிழ்நாட்டில் குடும்ப கட்டுப்பாடு  தீவிரமாக கடைபிடிக்கப்பட்டதால் இந்த குறைப்பு   ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களில்  தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இது தென்னிந்தியா மாநிலங்களின் மீது தொங்கும்  மத்திய அரசின் கத்தியை போன்றது.

இது குறித்து ஆலோசிக்க  5ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள  கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அனைவரும் இதில் கலந்து கொள்ளும்படி உங்கள்  மூலமாக அழைப்பு விடுக்கிறேன்.

8 தொகுதியை இழந்தால் தமிழ்நாட்டின் குரல்  மக்களவையில் குறையும்.  நீட், உள்ளிட்ட  பிரச்னைகளில்  நாடாளுமன்றத்தில் நம்முடைய எம்.பிக்கள் குரல் எழுப்ப வேண்டியது அவசியம். மத்திய  அரசு தமிழ்நாட்டின் குரலை ஒடுக்க சதி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

error: Content is protected !!