கல்வி நிதியை தர மறுத்து இந்தியை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2152 கோடியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. அந்த நிதியை தமிழ்நாடு அரசு கேட்டால் தேசிய கல்வி கொள்கையையும் மும்மொழி கொள்கையையும் தமிழ்நாடு ஏற்று கொள்ள வேண்டும் அப்பொழுது தான் நிதியை விடுவிப்போம் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கல்வி நிதியை நிறுத்தி வைத்து இந்தியை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று அனைத்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திருச்சியில் பி எஸ் என் எல் தலைமை அலுவலகம் முன்பாக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவர் அணி, திராவிடர் கழக மாணவர் அணி, இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் உள்ளிட்ட கூட்டமைப்பில் உள்ள மாணவர் அமைப்பினர் பங்கேற்றனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருச்சி மேயர் அன்பழகன்,, திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
ஒன்றிய அரசு உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்க வேண்டும், தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க கூடாது, கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.