ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த 19-ம் தேதிதொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் குரூப் – ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் குரூப் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளன. இதே பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.
தொடரை நடத்துவதோடு நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் பாகிஸ்தான் அணி களம் கண்ட நிலையில் தொடரில் இருந்தே தற்போது வெளியேறி உள்ளது. இது அந்த நாட்டு ரசிகர்களுக்கு அதிருப்தி தரும் விதமாக அமைந்துள்ளது. அணி நிர்வாகம், வீரர்களின் அணுகுமுறை என பல காரணங்களை பாகிஸ்தான் தோல்விக்கு பட்டியலிடுகின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.
இந்திய அணி வரும் மார்ச் 4-ம் தேதி அன்று துபாயில் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறது. அதற்கு முன்பாக குரூப் சுற்றில் நியூஸிலாந்து அணியுடன் மார்ச் 2-ம் தேதி விளையாடுகிறது.
தற்போது குரூப் ஏவில் நியூசிலாந்து முதலிடத்திலும், இந்தியா 2ம் இடத்திலும் உள்ளது.
2ம் தேதி நடைபெறும் போட்டியில் , இந்தியா, நியூசிலாந்தை தோற்கடித்து விட்டால் இந்தியா முதலிடத்திற்கு வந்து விடும்.
அப்படியானல் பி பிரிவில் 2ம் இடம் பிடிக்கும் அணியுடன் இந்தியா அரையிறுதியில் மோதும்.
தற்போது பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் முதல் 2 இடத்தில் உள்ளன. இன்று குரூப் சுற்று போட்டியில் இந்த 2 அணிகளும் மோதுகிறது. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அது முதலிடத்திற்கு வந்து விடும்.
எனவே அரையிறுதியில் எந்த அணி யாருடன் மோதுகிறது என்பது வரும் 2ம் தேதி இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி முடிந்த பிறகு உறுதியாக தெரியவரும்.