கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன். கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருக்கிறார். கோவை உக்கடம் செல்வபுரத்தில் உள்ள இவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலத்தில், தன் வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடக்கிறது.
எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மட்டுமின்றி அவரது மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருவாயைக் காட்டிலும் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கூடுதலாக குவித்துள்ளதாக அர்ஜுனன் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருவதை அறிந்த அதிமுகவினர் அந்த பகுதியில் கூடி உள்ளனர்.