தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார்.
அதாவது சென்னையில் 33 இடங்களிலும், மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. முதல்வர் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாய் வரை அரசு மானியமாக வழங்குகிறது. இதில் 50 சதவீத தொகையானது ரொக்கமாகவும் மீதமுள்ள 50 சதவீதம் மருந்துகள் வடிவத்திலும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழா இன்று காலை 10.30 மணிக்கு நடந்தது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவுக்கு தலைமை செயலாளர் முருகான்நதம் தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.
விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன். சேகர்பாபு, மேயர் பிரியா, உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. ஆகியோரும் வந்திருந்தனர்.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,‘‘ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருந்து செலவுகளை குறைக்கும் வகையில் தரமான மருந்துகள் குறைவான விலையில் முதல்வர் மருந்தகங்களில் விற்கப்படும். இங்கு அனைத்து மருந்துகளும் சந்தை மதிப்பை விட 75 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.