வாட்ஸ் அப் மூலம் சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய சீரியல் நடிகர் செந்தில் ரூ.15,000 பணத்தை இழந்ததாக தெரிவித்துள்ளார். இணையம் மூலம் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருவதால், அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இருப்பினும் பலர் இந்த மோசடி மூலம் பணத்தை இழக்கின்றனர்.
அந்த வகையில் சீரியல் நடிகர் செந்தில் வாட்ஸ் அப் மூலம் சைபர் கிரைம் மோசடியில் சிக்கி ரூ.15,000 பணத்தை இழந்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், அந்த வீடியோவில், “கோவையை சேர்ந்த நண்பர் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் தனக்கு உடனடியாக ரூ.15,000 வேண்டும் என்று ஒரு வங்கி கணக்கு எண்ணையும் அனுப்பியதாக கூறியுள்ளார்.
அதை சோதனை செய்து பார்க்காமல் பணத்தை அனுப்பிவிட்டதாகவும், பணத்தை அனுப்பிய பிறகு யோகேந்தர் என வேறு ஒரு நபரின் பெயரை
காட்டியதால் சந்தேகமடைந்து எனது நண்பரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது வாட்ஸ்அப் கணக்கை யாரோ முடக்கிவிட்டதாக கூறினார். அவரது எண்ணில் இருந்து இதே போல் பலருக்கு குறுஞ்செய்து அனுப்பப்பட்டுள்ளதாகவும், சிலர் பணத்தையும் அனுப்பியிருக்கிறார்கள் என்றும் கூறினார்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். எனவே, இதுபோல் உங்களுக்கு தெரிந்தவர்களின் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால், பணத்தை அனுப்புவதற்கு முன் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.