Skip to content

தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் ஆமை வேகத்தில் புதுப்பிக்கும் பணி…

  • by Authour

இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 508 ரயில் நிலையங்கள் அம்ரீத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இதில் தெற்கு ரயில்வே நிலையங்களில் உள்ள 25 ரெயில் நிலையங்களும் அடங்கும்.

தமிழகத்தில் முதல்கட்டமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 18 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகிறது. இதேபோல் புதுச்சேரி ரயில் நிலையம், கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்கள் முதல் கட்டமாக ரூ.616 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.

இதில் தமிழகத்தின் மிகவும் பழமைவாய்ந்த ரயில் நிலையங்களில் தஞ்சை ரயில் நிலையமும் ஒன்றாகும். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரயில் நிலையம் தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1861-ம் ஆண்டு தஞ்சை ரயில் நிலையம் தொடங்கப்பட்டது. இங்கிருந்து திருச்சி-நாகை வழித்தடம், ஆங்கிலேயர்களின் வாணிப போக்குவரத்துக்கு மிகவும் உதவியாக இருந்து வந்தது. அப்போதே இந்த வழித்தடம் அகல ரயில்பாதையாக இருந்தது. இதற்கு பின்னர் மீட்டர்கேஜ் பாதையாக மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழித்தடம் மீண்டும் அகல ரெயில் பாதையாக்கப்பட்டது.

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லவும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லவும் முக்கிய வழித்தடமாக தஞ்சை இருந்தது. திருச்சி-விழுப்புரம் இடையே ரயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர் தஞ்சை வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் மிக முக்கிய சுற்றுலாத்தலமாக தஞ்சாவூர், கும்பகோணம், நாகை, திருவாரூர், வேளாங்கண்ணி ஆகியவை அமைந்து இருப்பதால் இப்பகுதிக்கு ரயில்களில் வருவதை சுற்றுலாப்பயணிகள் விரும்புகின்றனர்.

தற்போது தஞ்சை வழியாக சென்னை, ராமேஸ்வரம், திருப்பதி, வாரணாசி, பெங்களூரு, புதுச்சேரி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, செங்கோட்டை போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும், தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் மயிலாடுதுறை, திருச்சி, நாகை, நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும் சென்று வருகின்றன.

தஞ்சை ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகளும், 7 ரயில்வே பாதைகளும் உள்ளன. தினமும் அதிகளவு பயணிகள் வந்து செல்வதாலும், எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிகம் இயக்கப்படுவதாலும், தஞ்சை ரயில் நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது. மேலும் பஸ் கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் பயணிகளின் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். மேலும் பயண நேரமும் குறைகிறது. இதனால் ரயில்களில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில் நிலையங்களில் தஞ்சை ரயில் நிலையம் முதன்மையாக விளங்கி வருகிறது.

இந்நிலையில்தான் அம்ரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வேயில் 90 ரெயில் நிலையங்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயணிகள் காத்திருப்போர் அறைகள், ரெயில் நிலையத்தில் சிற்றுண்டிக்கடைகள் அல்லது சிறிய கடைகள், ஒரு ரெயில் நிலையத்தில், “ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” திட்டத்தின் கீழ்

குறைந்தபட்சம் 2 கடைகள், ரெயில் நிலையத்தின் முக்கிய இடங்களில் ரெயில் வருகை, புறப்பாடு உள்ளிட்ட விவரங்களை காட்சிப்படுத்தும் பலகைகள், அனைத்துப் பகுதிகளிலும் 600 மீட்டர் நீளம் கொண்ட உயர்நிலை நடைபாலம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தில் தஞ்சை ரெயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. முகப்பு பகுதியில் கோயில் கோபுரம் போன்ற அமைப்பு முடியும் தருவாயில் உள்ளது. நடைமேடைகளில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன வசதியுடன் பயணிகள் காத்திருப்போர் அறை என்று புதுப்பொலிவு பெற்று வருகிறது.

பிளாட்பாரங்கள் மேம்படுத்தப்படுவதுடன் மேற்கூரைகளும் முழுமையாக அமைக்கப்பட இருக்கிறது.

எக்ஸ்லேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. நடைமேடைகள் புதுப்பிக்கப்படுகிறது. இதில் முக்கியமாக ரயில் நிலையத்திற்கு வரும் வாகனங்களின் நெரிசலை போக்கும் வகையில் ரயில் நிலையத்தின் வெளிப்புறம் சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு பணிகளால் தஞ்சாவூர் ரயில் நிலையம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. இருப்பினும் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் வேகமாக நடந்து வந்தது. தற்போது மந்தக்கதியில் நடப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!