சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி அவரிடம் இருந்த தங்கம், வைர நகைகள் 27 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 1526 ஏக்கர் நிலம் மற்றும் வெள்ளி பாத்திரங்கள், பொருட்களம் பறிமுதலானது.
இப்போது இந்த சொத்துக்கள் அனைத்தும் தமிழக அரசிடம் உள்ளது. அவை கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நகை, பணம், நிலங்கள் என்ன செய்யப்படும் என்பது குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஜெயலலிதாவின் நகைகள் அனைத்தும் தமிழக அரசிடம் வந்துள்ளதால் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி ஏலம் விடும் நடவடிக்கைகள் தொடங்கும். லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் கலெக்டர் மேற்பார்வையில் வருவாய்த் துறையினர் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்குவார்கள். இந்த பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்கும். கட்டிடங்கள், இடங்கள், நிலத்தை பொறுத்தவரை சிட்கோ, அல்லது டான்சி மூலம் அரசு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டு அதன் பிறகு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து மூத்த வக்கீல்களிடம் கேட்டபோதும், அவர்கள் ஜெயலலிதாவின் நகைகள் ஏலம் விடப்படும். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்றனர்.