திருச்சி – சென்னை, திருச்சி- மதுரை ரோடு மற்றம் ஜங்ஷன் பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்தது. நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்,கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி ஆகியோர் அந்த பகுதியில் உள்ள 30 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
அதைத்தொடர்ந்து இன்று காவல்துறை பாதுகாப்புடன் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடங்கினர்.
முதலில் இரண்டு டீக்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது அதைத் தொடர்ந்து திருச்சி மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் .இது பற்றி தகவல் அறிந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கனியமுதன்,
மாநில துணைத்தலைவர் அரசு,வக்கீல் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. எங்களுக்கு நேரம் கொடுங்கள் நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.
இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . போலீசார் இதில் தலையிட்டு விடுதலை சிறுத்தைகளை அமைதிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அருகில் உள்ள மற்ற கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 30 கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.