கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டியில் ஸ்ரீநகரில் ஒரு குடோன் உள்ளது. கோவையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் இந்த குடோனை கவனித்து வருகிறார். இந்த குடோனில் கேரளாவுக்கு கடத்துவதற்காக எரிசாராயம் பதுக்கி வைத்துள்ளதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சூலூர் காவல் நிலைய போலீசார் குறிப்பிட்ட குடோனை அதிரடியாக சோதனை செய்தனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கேன்களில் 5145 லிட்டர் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து
எரிசாராய கேன்களை பறிமுதல் செய்த போலீசார், இந்த கடத்தலில் ஈடுபட்ட கேரள மாநிலம் கொல்லங்கோட்டைச் சேர்ந்த ரஜித் குமார் (38), ஒண்டிப்புதூரைச் சேர்ந்த பிரபாகர் (47), கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த ஜான் விக்டர் (45) ஆகியோரை கைது செய்தனர். மூவரிடமும் இரு சாராயம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கள்ளச்சாராயம் மரணங்கள் தமிழகத்தை உலுக்கி வரும் நிலையில் கோவை புறநகரப் பகுதியில் சுமார் 5000 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.