புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வடகாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம், இவர் ஜெயலலிதா ஆட்சியில் 2001ல் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த 2010ம் வருடம் அக்டோபர் மாதம் 7ம் தேதி மாலை வெங்கடாசலம் தனது வீட்டின் முன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது, பர்தா அணிந்து பெண்கள் வேடத்தில் வந்த 5 பேர் வெங்கடாசலத்தை சரமாரி வெட்டிவிட்டு காரில் தப்பினர்.
படுகாயமடைந்து உயிருக்கு போராடிய வெங்கடாசலத்தை, புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். இந்த கொடூர கொலை தொடர்பாக தஞ்சை மாவட்டம் பேரவூரணியைச் சேர்ந்தசெ.கணேசன்,வீரக்குடி ரா.முத்துக்குமார்,
சீ.முத்துகிருஷ்ணன், தேவகோட்டை திலகேஸ்வரன், திருவாடானை மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் இன்று கோர்ட்டுக்கு வரவில்லை. எனவே நீதிபதி வசந்தி வழக்கை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ஜாய்ஸ் குமார் ஆஜரானார். வெங்கடாசலம் கொலை வழக்கு விசாரணைக்கு வந்ததால் புதுகை கோர்ட்டில் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.