மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண்களுக்கான முதல் பள்ளியாக அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டமங்கல தெருவில் திறக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இப்பள்ளியின் கூடுதல் கட்டடம் டபீர் தெருவில் இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு அரசு நபார்டு திட்டத்தில் 15 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து அங்கு ரூ 3.53 கோடி மதிப்பீட்டில் 15 வகுப்பாறைகளுடன் கூடிய புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.