செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள வட மணி பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். இதனையடுத்து பள்ளி அளவில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “நல்லவேளை நான் கூட பயந்தேன் தமிழ்நாட்டின் அரசியல் களம் தெரிந்து தான் பாரதிய ஜனதா தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கிறது என நினைத்தேன், ஆனால் பாஜகவிற்கு தமிழகத்தின் சென்டிமென்ட்டும் தெரியவில்லை, மும்மொழிக்கொள்கைக்கான ப்ளஸ், மைனஸ் தெரியவில்லை, அதற்கு ரொம்ப சந்தோஷம். புரிதலே இல்லாதவர்களுக்கு தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கான வாய்ப்பே இல்லை.முதலில் வரலாற்றை தெரிந்து கொண்டு, இன்றைக்கு எந்தெந்த இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிள்ளைகள் எந்தெந்த உயரத்தில் இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச வேண்டும்.
இல்லம் தேடி கல்வி புதிய கல்வி கொள்கையில் தான் வருகிறது என சீமான் கூறுகிறார். அதற்குத்தான் நம் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை நாங்கள் என்னென்ன செய்தோம் என நாங்களே தம்பட்டம் படித்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை, எங்களை பாராட்டுவது ஒன்றிய அரசுதான், குறிப்பாக 35 முதல் 40 மார்க் வாங்கும் மாணவர்களை 60 முதல் 70 வரை மார்க் வாங்க வைப்பது தான் எங்களுடைய கடமை” என்றார்.