கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது..
திருச்சி கீழக்குறிச்சி பெரியார் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் ( வயது39 ) . இவர் பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகே
நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவராஜை வழிமறித்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பாக்கெட்டில் இருந்த ரூ.1000 பணத்தை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து கொட்டப்பட்டு ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது28 ) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபருக்கு கத்திக்குத்து
திருச்சி உறையூர் மேல மின்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் (35). இவர் பூச்சி மருந்து அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .
இதையடுத்து நேற்று ஐயப்பன் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 2 வாலிபர்கள் ஐயப்பனை கத்தியால் தாக்கினர். இதில் முதுகில் காயம் அடைந்த ஐயப்பன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து உறையூர் தியாகராஜ நகர் பகுதி சேர்ந்த சரவணன் ( 24 ) என்பவரை கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது…
திருச்சி இ.பி ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். தகவலையடுத்து நேற்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இபி ரோடு தனியார் பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கஞ்சா விற்றதாக கிழக்கு தாரா நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (வயது18) மற்றும் இ.பி ரோடு உப்பிலிய தெரு பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது18 ) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று திருச்சி பாலக்கரை தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்றதாக பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய செல்வகுமார் (வயது22) என்ற வாலிபரை பாலக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.