Skip to content

டில்லியில் இன்று நிலநடுக்கம்- மக்கள் அலறி ஓட்டம், பிரதமர் முக்கிய வேண்டுகோள்

டில்லியில் இன்று அதிகாலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் உணரப்பட்டு உள்ளது. இதனால், அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதேபோன்று, டில்லியில் ரெயில்வே நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகளும் நிலநடுக்கம் உணரப்பட்டது என தெரிவித்தனர்.  ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் அலறி ஓட்டம் பிடித்தனர்.

ரெயில் பயணிகளில் சிலர் கூறும்போது, நான் ரெயிலுக்காக காத்திருந்தேன். அப்போது, கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை உணர்ந்தேன். ரெயில் நிலையத்திற்குள்  பாதாளத்தில் இன்னொரு ரயில் ஓடினால் எப்படி அதிர்வு இருக்குமோ அப்படி அதிர்வு ஏற்பட்டது என்றனர்.

வேறொருவர் கூறும்போது, நிலநடுக்கம் வலிமையாக இருந்தது.  இதுபோன்று இதற்கு முன்பு நான் உணர்ந்ததில்லை. முழு கட்டிடமும் குலுங்கியது என கூறியுள்ளார். எனினும், இதனால் ஏற்பட்ட  சேதங்கள  உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை.

டில்லியில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில் “டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. எல்லோரும் அமைதி காக்கும்படி கேட்டு கொள்கிறேன். நிலநடுக்க நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாக  கவனித்து வருகின்றனர். மக்கள் அமைதியாக, அதிகாரிகள் கூறும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!