திருப்பூரில் பாஜக பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகி குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய குஷ்பு, “ஒரு கட்சி தலைவராக இருக்கும்போது விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பதில் தப்பே இல்லையே… பாதுகாப்பு கேட்கவில்லை என்று விஜய் சொன்னாரா? மத்திய அரசு கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்டால் தமிழ்நாட்டிலிருந்து வருவதில்லை. தமிழகத்தில் சில யூடியூபர்கள் நடிகைகள் குறித்து அவதூறாக பேசி வருகின்றனர். தங்கள் வீட்டில் பெண்கள் இருப்பதை மறந்து பெண்கள் குறித்து யூடியூபர்கள் பேசுகின்றனர். வெறும் இரண்டாயிரம் காசுக்காக, பெண்கள் குறித்து அவதூறு பரப்பும் யூடியூபர்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து கட்சி பெண்களை அழைத்து முதல்வர் பேச வேண்டும்.
மத்திய அரசு தமிழகத்துக்கு பட்ஜெட்டில் எந்த நிதியும் தரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். காங்கிரஸ் மத்தியில் இருந்தபோது அவர்கள் தமிழகத்துக்கு ஒதுக்கியது வெறும் ரூ.8,500 கோடி மட்டுமே. ஆனால் பாஜக ஆட்சியில் இதுவரை 1.70 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலினுக்கு கணக்கு தெரியாமல் இருக்கலாம். எங்களிடம் கணக்கு உள்ளது. அவருக்கு தேவைப்பட்டால் கணக்கு சொல்லித் தர தயாராக உள்ளோம். பாஜகவின் வளர்ச்சி திமுக உள்ளிட்ட கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது” என்றார்.