கள்ள சந்தையில் மது விற்றவர் கைது…
திருச்சி உறையூர் – குழுமணி சாலையில் கள்ளச் சந்தையில் மது விற்கப்படுவதாக உறையூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு மது மற்றும் பீர் விற்றதாக ஒருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் உறையூர் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த ராஜன் என்பது தெரிய வந்தது .அவரிடம் இருந்து பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பீர் மற்றும் மது பாட்டில்கள் மொத்தம் 90 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை ஊசிகள், மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது..
திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் அதிக அளவில் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் திருவரங்கம்,காந்தி மார்க்கெட் பகுதியில் அந்தந்த போலீஸ் சரக இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கினர். இதில் திருவரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெரு பகுதியில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்றதாக வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். சித்தார்த் என்பவரை தேடி வருகின்றனர். கைதானவரிடம் இருந்து 50 போதை மாத்திரைகள், சிரஞ்சு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து ரூ 6300 பணம், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது .இதே போல் வடக்கு தாராநல்லூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் சூர்யா என்கிற சூரியமூர்த்தி என்கிற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 போதை மாத்திரைகள் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கஞ்சா விற்ற 5 பேர் சிக்கினர்…
திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், பொன்மலை, கோட்டை, கண்டோன்மென்ட் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்தந்த போலீஸ் சரக இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கினர். அவர்களுடன் மதுவிலக்கு போலீசாரும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் கஞ்சா விற்றதாக எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த குமார் / பொன்மலையைச் சேர்ந்த நிவித்திரன், பெரிய கடை வீதியைச் சேர்ந்த ஜெகதீஷ் , இ.பி. ரோடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், திருவரங்கத்தை சேர்ந்த குமார் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த கல்லூரி ஊழியர்..
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் இ.வி.எஸ் தெரு பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (74). திருமணம் ஆகாத இவர் தனியார் கல்லூரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் பக்கவாதம் நோயினால் பாதிக்கப்பட்டு தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் .இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அருகில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் லிரைந்து வந்து பார்த்தனர்.உடல் அழுகிய நிலையில் கிடந்தது.போலீசார் சந்திரமோகன் உடலை கைப்பற்றி பிரேத பரி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் வைத்தனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து,அவர் எப்படி இறந்தார் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு..
திருச்சி உய்யகொண்டான்திருமலை ஆற்றுக்கரையில் பாண்டமங்கலத்துக்கும் சோழன்பாறைக்கும் இடைப்பட்ட பகுதியில் 60 வயது மதிக்கப்பட்ட மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டூவீலரை திருடிய வாலிபர் கைது
திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் .( 22 )இவர் ரயில்வேயில் அப்ரண்டீஸ் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அரியமங்கலம் உக்கடை பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது வாகனம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் அருளானந்தர் கோவில் தெருவைச் சேர்ந்த லூயிஸ் பிரிட்டோ (19 )என்ற வாலிபரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.