தஞ்சை மாவட்டம் வல்லம், ஆலக்குடி பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உரிய தொகை விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த தொகை வங்கிக்கடனுக்காக பிடித்தம் செய்யக்கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் ஜூன் மாதம் 12-ந்தேதி அணை திறக்கப்படவில்லை. தாமதமாக ஜூலை மாதம் 28-ந்தேதி திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்தது. சம்பா, தாளடி சாகுபடி 3 லட்சத்து 42 ஆயிரம் ஏக்கரில் நடைபெறும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சம்பா, தாளடி சாகுபடி 3 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கரில் நடந்தது.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகளை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையிலும் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, வல்லம், கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி உட்பட பல பகுதிகளில் விவசாயிகள் இரவு, பகலாக அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அறுவடை செய்யப்படும் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 10 தாலுக்காக்களிலும் 526 இடங்களில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால் கொள்முதல் நிலையங்களில் அதிகளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. நெல் மூட்டைகள் தேங்காத வகையில் உடனுக்குடன் நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. தினமும் சராசரியாக 11 ஆயிரம் முதல் 12 ஆயிரம் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் கொடுத்த நெல்லை கொள்முதல் செய்து அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கும் போது அந்த பணத்தை வங்கிகள் விவசாயிகளின் பேரில் உள்ள நகை மற்றும் விவசாயக்கடனுக்கு பிடித்தம் செய்கின்றனர். ஏற்கனவே பருவம் தவறி பெய்த மழையால் எதிர்பார்த்த சாகுபடி இல்லாமல் மகசூல் பாதித்துள்ள விவசாயிகள் வங்கிகளின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தோழகிரிப்பட்டி விவசாயி கோவிந்தராஜ் கூறியதாவது: நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெய்த தொடர் மழையால் பால் பிடிக்கும் தருணத்தில் நெல் பயிர்கள் பாதிப்பை சந்தித்தன. மேலும் பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் வயலில் சாய்ந்தது. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக ஒரு ஏக்கருக்கு சராசரியாக 35 மூட்டை நெல் மகசூல் எடுக்க வேண்டிய இடத்தில் 24 மூட்டை நெல் கிடைப்பதே பெரும் பாடாக உள்ளது. இதில் அறுவடை இயந்திரம் வாடகை, நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டிய செலவு, உரமூட்டைகளுக்கு வழங்க வேண்டிய பணம் என்று விவசாயிகள் இந்த பணத்தில் இருந்துதான் கொடுக்க வேண்டும்.
தற்போது பெருமளவில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை விற்பனை செய்யும் பணம் இந்த கடனுக்கே போதாத நிலை உள்ளது. இதற்கிடையில் வங்கி நிர்வாகங்கள் நெல் கொள்முதல் பணத்தை விவசாயிகளின் கடனுக்கு வரவு வைப்பதால் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாவார்கள். எனவே தற்போது மகசூல் பாதிக்கப்படடுள்ள நிலையில் நெல் விற்பனை பணத்தை விவசாயிகளின் வங்கி கடனுக்கு வரவு வைக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.