அண்மையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு இஸ்லாமியர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியினர் வக்ஃபு திருத்த சட்ட மசோதா நகலை எரிக்கும் போராட்டத்தை நடத்தினர். சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து நகலை எரிக்க முயன்ற பொழுது காவல்துறையினர் அவர்களை தடுத்ததால் கிழித்தெறிந்து அவர்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
இது குறித்து பேசிய எஸ் டி பி ஐ கோவை மத்திய மாவட்ட தலைவர் முகமது இஷாக், ஜனநாயக நாடான இந்தியாவில் சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்களின் 9.4 லட்சம் கோடி ஏக்கர் வக்ஃபு சொத்துக்களை மத்திய பாஜக அரசு புதிய திருத்த சட்டம் மூலம் அந்த இடங்களை ஆக்கிரமித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கு திட்டம் தீட்டி வருவதாக தெரிவித்தார். காலம் காலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக இஸ்லாமிய முன்னோர்களால் வழங்கப்பட்ட அந்த சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு சொந்தம் இல்லாத சொத்துக்களை போலவும் அரசாங்கத்திற்கும் அதில் குத்தகைக்கும் வாடகைக்கும் இருக்கக்கூடிய மக்களுக்கும் சொந்தமானதாக மாற்ற முயற்சிப்பதாக தெரிவித்தார்.