தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது நடுவிக்கோட்டை. இங்கு ஒரு தனியார் சிபிஎஸ்சி பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் 10ம் வகுப்பில் 3 மாணவிகள் உள்பட 19 பேர் படித்து வந்தனர். இவர்களுக்கு நாளை சிபிஎஸ்சி பொதுத்தேர்வு தொடங்குகிறது.
ஆனால் இன்று வரை மாணவ, மாணவிகள் 19 பேருக்கும் ஹால் டிக்கெட் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளியில் போய் கேட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சரியான காரணம் சொல்லப்படவில்லை.
இதனால் 19 மாணவ மாணவிகளும் தங்கள் பெற்றோருடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இது குறித்து கலெக்டர் விசாரித்தபோது தான் பள்ளிக்கு 8ம் வகுப்பு வரை தான் அங்கீகாரம் இருப்பது தெரியவந்தது. எனவே இந்த பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நாளை தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சென்னையில் உள்ள சிபிஎஸ்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு இதற்கு மாற்று ஏற்பாடு செய்யும்படி கேட்டார். அதற்கு நாளை தேர்வு எழுத வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் கூறி விட்டனர். அத்துடன் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் தேர்வில் இவர்களை தேர்வு எழுத வைக்க முடியுமா என்பது குறித்து ஆலோசிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதனால் மாலை 3 மணி வரை மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோருடன் கண்ணீர் சிந்தியபடி நின்றிருந்தனர். இப்படி போலி பள்ளிகள் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கூறினர்.