சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் கிரடாய் சென்னை (CREDAI CHENNAI) சார்பில் கிரடாய் பேர்ப்ரோ 2025 (CREDAI FAIRPRO 2025) கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கோவை, மதுரை, ஓசூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட 136 நகரங்களுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. கோவை, மதுரைக்கான முழுமையான திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும். சென்னையை சுற்றியுள்ள மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர், பரந்தூர் பகுதிகளுக்கு புதுநகர வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கட்டடங்களை கட்டுவதற்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மனை, கட்டட விண்ணப்பங்களுக்கான ஒப்புதல் விரைவாக, வெளிப்படையாக வழங்கப்படுகிறது. சென்னையில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதே அரசின் நோக்கம். சென்னையில் உள்ள 12 ஏரிகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, மாமல்லபுரம் பேருந்து நிலையங்கள் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.