சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் போக்குவரத்து பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பெண் காவலர் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் மீதான பாலியல் தொல்லை புகாரை விசாரிப்பதற்காக டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விசாகா கமிட்டியின் விசாரணை அறிக்கையை தொடர்ந்து மகேஷ்குமார் மீது அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே ஐபிஎஸ் அதிகாரி மகேஸ்குமாரின் மனைவி அனுராதா திடீரென ஒரு குண்டை தூக்கி போட்டு உள்ளார். தன் கணவர்(மகேஸ்குமார்) மீது பாலியல் புகார் கூறிய பெண் காவலருக்கும், தனது கணவருக்கும் ஓராண்டாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.
தற்போது அந்த பெண் காவலர் வீடு கட்டுவதற்காக ரூ.25 லட்சம் கேட்டு என் கணவரை டார்ச்சர் செய்தார். பணம் கொடுக்காததால், என் கணவர் மீது பாலியல் புகார் கொடுத்து உள்ளார் என கூறி உள்ளார்.
மகேஸ்குமார் மனைவியின் இந்த பகீர் குற்றச்சாட்டு, இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.