தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவராக இருந்த மறைந்த நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் பிறந்த ஊரான கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் ஒன்றியம் வையம்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார் மற்றும் நாயுடுவின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: விவசாயிகளின் விடிவெள்ளியாக தோழனாக இருந்து விவசாயிகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்த , குறிப்பாக இலவச மின்சாரம் பெற பாடுபட்ட மாமனிதர் நாராயணசாமி நாயுடு. அவரது பிறந்த நாளில் அவரது சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்வது பெருமையாக இருக்கிறது.
அவர் வாழ்ந்த இல்லத்தை நூலகமாக மாற்ற வேண்டும்.அடுத்த வருடம் அவரது நூற்றாண்டு விழா வருகிறது. அதற்குள் இந்த பகுதியில் ஒரு நினைவு வளைவு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை அவரது குடும்பத்தினர் வைத்தனர். அது குறித்து முதல்வரின் கவனதுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு விழா அனைத்து விவசாயிகளையும் சென்றடையும் வகையில் சிறப்பாக அந்த விழா கொண்டாடப்படும். விவசாயிகளுக்கும் , இந்த பகுதி மக்களுக்கும் அவர் பெருந்தலைவராக, நன்மதிப்பு பெற்றவராக இருந்தார். அவரது பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிப்பத்து பெருமையாக இருக்கிறது என்று இவ்வாறு அவர் கூறினார்