வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று (பிப்.13) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 9-ம் நாள் அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, வக்பு (திருத்தம்) மசோதா, 2024 இன் கூட்டுக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் அமளிக்கு மத்தியில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மசோதா தொடர்பான ஆதாரங்களை பதிவு செய்வதற்காக மசோதா சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, மீண்டும் அவை கூடியதும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “வக்பு திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழு, அதில் இருந்த எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்புக் குறிப்புகளை நீக்கி உள்ளது. அதேநேரத்தில், வெளியில் இருந்து வந்தவர்களின் கருத்துகளைச் சேர்த்துள்ளது. இது அரசியலமைப்புக்கு விரோதமானது. இத்தகைய அறிக்கையை தாக்கல் செய்ய சபை அனுமதிக்காது” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அனைத்து எதிர்ப்புக் குறிப்புகளும் அறிக்கையின் பின்னிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், “நீங்கள் ஏன் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? எதிர்ப்புக் குறிப்புகளின் எந்தப் பகுதியும் நீக்கப்படவில்லை.” என்று அவர் கூறினார்.