அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, முன்னாள் எம்.பி கே. சி. பழனிசாமி, மற்றும் புகழேந்தி ஆகியோர் தனி அணிகளாக செயல்படுகிறார்கள். இவர்கள் அதிமுகவுக்கு எதிராக பல சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த வாரம் கோவையில் எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் சீனியருமான செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். அத்துடன் விழா அழைப்பிதழில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் விழாவுக்கு செல்லவில்லை என்றும் கூறினார்.
அத்துடன் விழா அழைப்பிதழில் எடப்பாடி பெயருக்கு அடுத்தபடியாக வேலுமணி பெயரும், 3வதாக செங்கோட்டையன் பெயரும் இடம் பெற்றிருந்ததும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
எம்.ஜி.ஆர் அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து அதன் மாவட்ட செயலாளராக இருப்பவர் செங்கோட்டையன், ஆனால் கோவை வேலுமணி, தனது பெயருக்கு கீழே செங்கோட்டையன் பெயரை போட்டது செங்கோட்டையனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், என்னை சோதிக்காதீர்கள் என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார்.
அவரது பேச்சு இன்று பல மாவட்டங்களில் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டது. இது எடப்பாடிக்கு மேலும் டென்ஷனை ஏற்படுத்தியது.
எனவே, செங்கோட்டையனின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சரும், எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமானவருமான ஆர்.வி. உதயக்குமார் விடுத்துள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
அதிமுக சோதனைகளை சந்திக்கலாம். அதை சோதனையாக கருதாமல் அதிமுக தொண்டர்களின் மன வலிமைக்கு வலு சேர்க்கிற சந்தர்ப்பமாக தான் நாம் பார்க்க வேண்டும். ஆகவே, இன்றைக்கு எதிரிகள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்களால் அதிமுகவை அசைத்து பார்க்க முடியாது. அதிமுகவுக்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது.
இது சோதனைகள் என்று யாரும் சோர்ந்து விட வேண்டாம். நாம் ஒற்றுமையாக களம் காணவேண்டிய தருணம் இது. மக்கள் விரோத திமுக அரசுக்கு நாம் முடிவுகட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையனைத்தான் மறைமுகமாக துரோகி என உதயக்குமார் சாடியுள்ளதாக அதிமுகவினர் கூறுகிறார்கள். உதயக்குமாரின் இந்த தாக்குதல் அதிமுகவில் மேலும் பிரச்னைகளை பூதாகரமாக்கும் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
.